, இனியவளின் இதய பகிர்வுகள் !: மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?
Views

9/28/13

மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?



தினம் தினம் விடிந்து விடுகிறது .... தினம் தினம் இதோ முடிந்தும் விடுகிறது ... இஷ்டமும் சரி, கஷ்டமும் சரி , இரவு பகல் போல மாறி கொண்டுதான் இருகின்றது .... நினைவலைகள் கூட சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் அமைதியாகவும் நெஞ்சினில் அலை மோதுகின்றது ....

இப்படி எல்லாமே மாறி கொண்டிருக்கையில் உங்களை நான் தொலைத்து விட்டு ஏங்கிய 'ஏக்கங்கள்' மட்டும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதன் மர்மங்கள் தெரியவில்லை .... ஏனோ நீங்கள் திடீரென வந்துவிட மாட்டீர்களா ? என்ற எண்ணம் தலைதூக்குவதை தடுக்கவே முடியவில்லை என்னால் .... நீங்கள் சொல்லி கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும் இங்கு காணாமலே போய் விடுகின்றன. தேடி பிடிக்கவும் விருப்பமில்லை எனக்கு... எப்போதெல்லாம் தனிமை என்னை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் உங்கள் நினைவுகளே எனக்கு துணை நிற்கின்றன .... எங்கெல்லாம் நான் இருளை உணர்கிறேனோ அங்கெல்லாம் உங்கள் நினைவுகள் தீபமாய் ... எங்கெல்லாம் நான் தடுமாருகிறேனோ அங்கெல்லாம் உங்கள் நினைவுகள் கைதாங்கியாய் ... யாருமற்ற வழிப்பாதையாய், திக்கற்று நான் நிற்கையிலே உங்கள் நினைவுகளை தவிர வேறு என்ன எனக்கு துணையாய் வர முடியும் ....

உலகினை நான் பார்க்க ஜன்னல் திறந்து காமித்துவிட்டு ... உறவுகளை சமாளிக்க நித்தம் சொல்லி கொடுத்துவிட்டு .... உழைப்பிற்கும் உள்ளத்து அன்பிற்கும் அடிபணிய சொல்லித்தந்துவிட்டு... சொல்லாமல் சென்றதென்ன ? மரியாதையின் மறுபெயராய் வாழ்ந்தவர் இப்படி செய்யலாகுமா ?

நித்தம் நித்தம் நான் திணறுகிறேன் ... நிந்தனையால் சிந்தனை மழுங்குகின்றது .... யாருக்காகவோ வாழ்ந்து யார் யாரையோ திருப்திபடுத்த முனைந்து , வாழ்க்கையின் பெரும் பகுதி முடிவடையும் இவ்வுலகில்... நதியில் சிக்கிய சிறு படகாய் தடுமாறுகிறேன் ...

எத்தனையோ அதிசயங்கள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கின்றதே ! நீங்கள் திரும்ப வந்துவிடும் அதிசயமும் நடந்தால் தான் என்னவாம் ? நடக்காது என்பது அறிவுக்கு தெரியும் . ஆனால் மனம் நிதம் எதிர்பார்க்கத்தானே செய்கிறது ... பித்து பிடித்த இந்த மனம் சித்து விளையாட்டை நம்புவதென்ன?




No comments:

Post a Comment