எங்கோ பிறந்து
எதிலோ நுழைந்து
பாதைகள் மாறி
பார்வைகள் பரிமாறி
மனதில் நுழைந்து
மாற்றங்களில் வளைந்து
வரும் பாதையில்
வாழ்க்கையெனும் போதையில்
எத்தனை உறவுகள் ?
எங்கெங்கோ உறவுகள் !
அர்த்தமற்ற சில உறவுகள்
அழகான சில உறவுகள்
ஆத்மார்த்தமாய் சில உறவுகள்
ஆரோக்கியமாய் சில உறவுகள்
இன்பமாய் இசையாய்
ஈசனாய் சில உறவுகள்
உயிராய் உணர்வாய்
உலகமாய் சில உறவுகள்
ஊக்கமாய் உற்சாகமாய்
ஊறுதராத சில உறவுகள்
ஒருமனமாய் ஒற்றுமையாய்
ஓரிரு உறவுகள் ......
ஆனால்
அன்பாய் ஆரம்பித்து
ஆபத்தாய் முடியும் - சில உறவுகள் !
நம்பிக்கையில் ஆரம்பித்து
நயவஞ்சகமாய் முடியும் - சில உறவுகள் !
பாசமாய் ஆரம்பித்து
வேசமாய் முடியும் - சில உறவுகள்
நாம் தேடி கொண்ட உறவுகள்
நாளும் மாறலாம் !
பெயர் வைக்காதே என் மனமே !
பேரிடியை கண்டு கலங்காதே என் மனமே !
பெயர் தெரியாத சில உறவுகள் ! - சட்டென்று
பெய்து செல்லும் மழையை போல !
மழை விட்டு சென்றாலும்
மனதில் வீசும் மண் வாசம் போல !
புன்னகை பூக்க செய்யும்
பெயர் தெரியாத சில உறவுகள் !
உண்மைதானே ? - கேளுங்கள்
உங்கள் உள்ளத்தை !
உங்கள்
உள்ளதை நேசிப்பவள் !